Wednesday, August 7, 2013

ஏரிக்கு கலிங்கு கட்டிய அரியலூர் மழவராயர் ஜமீன்தார் - அரியலூர் கல்வெட்டில் புதுதகவல்



அரியலூரை ஆட்சி செய்த ஜமீன்தார் சந்தன ஏரிக்கு தண்ணீர் வரத்துக்காக கலிங்கு கட்டியது பற்றிக் கூறும் புதிய கல்வெட்டு கிடைத்தள்ளது .
அரியலூரில் இக்கல் வெட்டுசந்தன ஏரிக்கு போகும் வழியில் பஸ்டிப்போ பின்புறம் ராவுத்தன் பட்டி சாலையில் உள்ள தரைப்பாலம் வாய்க்காலில் வைத்துக் கட்டப்பட்டுள்ளது . இக்கல்வெட்டு பற்றி முனைவர்பட்டஆராய்ச்சியாளர் செவ்வேள் கொடுத்து தகவலின் பேரில் அரியலூர் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் டாக்டர் தியாராஜன் சென்று படியெடுத்து ஆய்வு செய்தார் . இவருடன் பேராசிரியர் ரவிச்சந்திரனும் ஆய்வில் கலந்து கொண்டார்.

இக்கல் வெட்டு தரும் செய்திகளை பற்றி பேராசிரியர் டாக்டர் தியாகராஜன் கூறியதாவது . ஏழு வரிகளில் மிக அழகிய கற்பலகையில் மிக அழகிய கற்பலகையில் இக்கல்வெட்டு சகவருஷம் 1759 மற்றும் கலியவருஷம் 4938ம் ஆண்டில் இது எழுதப் பட்டுள்ளது. ஏவிளம்பி வருஷம் சித்திரை மாதம் 17ம் தேதி குருவாரம் உத்திராடம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் அரியலூரை ஆட்சி செய்த விஜய ஒப்பிலாத மழவராயர் என்ற ஜமீன்தார் கலிங்கு கட்டியுள்ளார் என இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இவர் அரியலூர் மகாராஜா ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவராய துரை என்பரின் மகன் எனவும் இக்கல்வெட்டு கூறுகிறது. கலிங்கு என்பது ஏரி நீர் நிரம்பி வழிந்து செல்லும் கடைப்பகுதியில் கட்டப்படும் நீர் அமைப்பாகும் . இந்த கலிங்கு சந்தன ஏரிக்கு கட்டப்பட்டது எனக்கருதலாம். இக்கல் வெட்டில் உள்ள கற்பலகை தற்போது இந்த ஏரிக்கரையை ஒட்டியுள்ள ஒரு தரைப்பாலத்தில் வைத்து கட்டப்பட்டுள்ளது . இக்கல்வெட்டு உள்ள பகுதி ஏரியின் கடைப்பகுதியாக ஒரு காலத்தில் இருந்திருக்கலாம் . தற்போது இது தூரந்து போய் இவ்வழியாக சாலை செல்கிறது . வரலாற்று சிறப்புடைய இக்கல்வெட்டு தற்பொழுது இப்பகுதியில் போடப்பட்டு வரும் சாலை மண்ணால் மூடப்பட்டு மறைந்து போய்விடால் காப்பாற்றப்பட வேண்டியது முக்கியமானதாகம் இவ்வாறு அவர் கூறியுள்ளார் .

கலிங்கு பற்றிக்கூறும் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள வாசகம்

ஸ்வஸ்தி ஸ்ரீசாலிசாகன சகாப்தஹாளூ 1759
கலியாப்தஹா ளூ4938யிதில் நிகழ்கி
ன்ற யோவிளப் ளூசித்திரை மீ 17 உகுருவா
ரம் உத்டதிராடங்கூடிய சுபதினத்தில் அரியலூர் மஹா
றாசறாச ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவறாயதுரை அவ
ர்கள் குமாரர் விசைய ஒப்பிலாத மழவறாயதுரை அவ
ர்களால் யிந்த கலுங்கு தர்மஞ் செய்யலாச்சது . 

(ஸ்வஸ்தி ஸ்ரீசாலிசாகன சகாப்தஹாளூ 1759 கலியாப்தஹா ளூ4938யிதில் நிகழ்கின்ற யோவிளப் ளூசித்திரை மீ 17 உகுருவாரம் உத்டதிராடங்கூடிய சுபதினத்தில் அரியலூர் மஹாறாசறாச ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவறாயதுரை அவர்கள் குமாரர் விசைய ஒப்பிலாத மழவறாயதுரை அவர்களால் யிந்த கலுங்கு தர்மஞ் செய்யலாச்சது .)