Wednesday, August 7, 2013

அரியிலூர் மழவராயர் ஜமீன் (படையாட்சி )


அரியிலூரென்னும் பெயர் அரியிலெனவும் வழங்கும். நங்கப் புலவர்களுள் ஒருவரான அரிசில் கிழாரென்பவருடைய ஊராகிய அரிசிலென்பது இவ்வூர் என்று சிலர் கூறுவதுண்டு. இங்கே மிகவும் பிரசித்தமான பழைய திருமால் கோயி லொன்று இருக்கிறது. அரிக்கு இல்லாக (இருப்பிட மாக) இத்தலம் இருத்தலால் அரியிலெனப் பெயர் பெற்ற தென்பர்.

விஷ்ணுவாலயம்

இங்கே உள்ள விஷ்ணுவாலயம் பெரியது. இதன்கண் எழுந்தருளியுள்ள பிரதானமான பெரு மாளின் திருநாமம் வேங்கடேசப் பெருமாளென் பது. கோயிலில் இளையபெருமாள், பிராட்டியார், ஆஞ்சனேயர் என்பவர்களோடு ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி மூலவராகவும் உத்ஸவராகவும் எழுந் தருளியிருக்கும் சந்நிதி ஒன்றுண்டு. வனவாசத் தில் அவர்கள் இருந்த திருக்கோலமாக அவ்விக்கிர கங்கள் அமைந்துள்ளன.

கோயிலின் மகாமண்டபத்தில் தசாவதார மூர்த்திகளும் மிகவும் பெரிய திருவுருவத்தோடு தூண்களில் எழுந்தருளி நிருக்கின்றனர். அதனால் அம்மண்டபம் தசாவதார மண்டபமென வழங்கும். அந்த மூர்த்திகளைப்போல அவ்வளவு பெரிய மூர்த்தி களை வேறிடங்களிற் காணுதல் அரிது. சிற்ப வேலைப்பாடுகள் மிக்க சிறப்புடையனவாக அம் மண்டபத்தில் அமைந்திருக்கின்றன. பத்து மூர்த்திகளுள் உக்ரநரசிம்ம மூர்த்தி மிக அதிகமாக அன்பர்களால் வழிபடப்பட்டு வருகின்றார்.

கீழைப் பழுவூர்

இவ்வூருக்குத் தெற்கே கீழைப் பழுவூர் என்னும் தேவாரம் பெற்ற ஒரு சிவ ஸ்தலம் இருக்கிறது. அதில் உள்ள தலவிருட்சம் ஆல். பழு என்னும் சொல்லுக்கு ஆலென்பது பொருள். ஆலமரத்தைத் தல விருட்சமாக உடையதாதலின் பழுவூரென்னும் பெயரும் ஆலந்துறை என்னும் பெயரும் அதற்கு உண்டாயின. அங்கே ஒரு சிவ தீர்த்தம் உண்டு. அத்தலத்தில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான் திருநாமம் ஆலந்துறை யீசர் எனத் தமிழிலும் வடமூலேசர் என வட மொழியிலும் வழங்கும். அம்பிகையின் திருநாமம் அருந்தவநாயகியென்பது. சிவபிரானை மணந்து கொள்ளும் பொருட்டு அம்பிகை தவஞ்செய்தமை யால் அத்திருநாமம் உண்டாயிற்றென்பது அத்தல புராண வரலாறு. அன்றியும் பரசுராமருக்குண் டான மாதுருஹத்தி தோஷம் அத்தலத்துக்கு வந்து தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து பூசித்ததனால் நீங்கியதென்பர். தீர்த்தவிசேடமுடைய தாதலின் துறையென்னும் பகுதி அத்தலப் பெயரோடு சேர்ந் திருக்கிறது. பரசுராமருடைய திருவுருவம், வட மூலேசருடைய மூலஸ்தானத்தின் முன்புள்ள நிலை யின் மேலேயுள்ள கல் உத்தரத்திற் சயனித்த கோலமாக அமைக்கப் பெற்றுள்ளது. பரசுராமர் தாம் வழிபட்ட காலத்தில் மலைநாட்டு அந்தணர் களைக் கொண்டு பூசை இயற்றச் செய்தனர். பிற்காலத்தும் மலைநாட்டந்தணர் பூசையியற்றி வந்தனர். இது திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரத்தில்,

"மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே"
"அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
பந்தமலி கின்றபழு வூரானை"



என்று கூறப்படுகின்றது. இக்காலத்தில் இவ்வழக்கம் காணப்பட வில்லை. அங்கே உள்ள சிலாசாசனங்களால் பழுவேட்டரைய ரென்ற பட்டம் பெற்றவர்களும் சோழ அரசனுடைய அதிகாரிகளுமாகிய சிலர் அங்கே இருந்தார்க ளென்று அறியலாம்.

சிவாலயம்

அரியிலூரிலிருந்து ஒரு சிவபக்தர் தினந் தோறும் கீழைப் பழுவூர் சென்று சிவ தரிசனம் செய்துவிட்டு வந்தபின்பே உண்பது நியமம். இவ் விரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள மருதாற்றில் ஒரு நாள் அதிக வெள்ளம் வந்தது. பழுவூர் செல்லவந்த அன்பர் அவ்வாற்றின் வெள் ளத்தால் தடைப்பட்டுக் கரையில் நின்று ஆராமை மீதூரப் புலம்பிநைந்தார்; உணவு கொள்ளாதிருந் தமையாலும் ஆற்றாமையாலும் சோர்ந்து விழுந்து நித்திரை கொண்டனர். அப்பொழுது அவருடைய கனவில் சிவபெருமான் ஒரு முதிய அந்தணத் திருக்கோலங்கொண்டு எழுந்தருளி, "இனி நீ தினந்தோறும் பழுவூர் வந்து அலையவேண்டாம்; அரியிலூரிலேயே ஓர் இடத்தில் ஆலயம் அமைத்து அங்கே எம்மையும் அம்பிகையையும் பிரதிஷ்டை செய்வித்து வழிபட்டு வருக. அங்கே நாம் சாந்நித்தியமாக இருந்து மகிழ்வோம்" என அருளிச் செய்து மறைந்தனர். பின்பு உணர்வு வரப்பெற்ற அவ்வன்பர் சிவபெருமானது திரு வருளை வியந்து அவர் இட்ட கட்டளைப்படியே இவ்வூரில் சிவாலயம் அமைத்தனர். பழுவூர்த் தலத்திலுள்ள மூர்த்திகளின் திருநாமங்களே அரியி லூரிலுள்ள மூர்த்திகளுக்கும் இடப்பட்டு வழங்கு வனவாயின.

வேறு கோயில்கள்

துர்க்காதேவியின் பல பேதங்களுள் ஒரு தெய்வமாகிய ஒப்பிலாதவள் என்னும் தேவிக்கு ஒரு கோயில் இங்கே உண்டு. அது மிகவும் பிரசித்தி பெற்றது. அரியிலூர் ஜமீந்தார்களுக்கு அத்தேவி குலதெய்வமாயிருத்தலன்றி அவர்களுடைய படை யாளர்களாகிய மழவர்களுக்கு வழிபடு தெய்வமாக வும் இருந்ததாகத் தெரிகிறது.

குறிஞ்சான் குளம் என்னும் ஒரு தடாகத்தின் கரையில் வாயுமூலையில் அரசு நட்ட பிள்ளையார் கோயில் என்னும் ஓராலயம் இருக்கிறது. ஒரு காலத் தில் அரியிலூர் ஜமீந்தாரொருவர் மீது பகையரச னொருவன் படையெடுத்து வந்தான். அவனுடைய படை அளவிற் பெரியதாக இருந்தது. இந்த ஜமீன் தாருடைய படை அதனை எதிர்க்கும் ஆற்றலுடைய தாகத் தோற்றவில்லை. அதனால் அவர் மிகவும் வருந் தினார். தோல்வியுற்றால் தம்முடைய சமஸ் தானத்தை இழக்க நேரிடுமே என்ற கவலை யாயினும் பின்வாங்காமல் எதிர்த்துப் போர் செய் வதையன்றி வேறு வழியில்லையென்றெண்ணினார். தெய்வ பலத்தையன்றி மனித பலத்தால் தமக்கு வெற்றி கிடைப்பது அரிது என்பதை அவர் உணர்ந் தார். ஆதலின் திருவருளே துணையெனத் துணிந்து தம் படையுடன் சென்றார். செல்லுகை யில் அக்கோயிலிலுள்ள விநாயகரை உள்ளம் உருகி வணங்கித் தம்மைக் காப்பாற்ற வேண்டு மென்று பிரார்த்தித்தார். விநாயகர் திருவருளால், வந்த பகையரசரது படை ஜமீந்தார் படைக்கு எதிர்நிற்கும் வலியின்றிப் புறங் கொடுத்து ஓடிப் போயிற்று. ஜமீன்தார் வெற்றி பெற்றார். தாம் வெற்றிபெற்றதற்குக் காரணம் விநாயகர் திரு வருளே என்பதை அவர் நன்றாக அறிந்தனர். தம் அரசை அழியாதபடி மீண்டும் நிறுவுவித்த அருளு டையவராகையால் அம்மூர்த்திக்கு 'அரசு நட்ட பிள்ளையார்' என்ற திருநாமம் சூட்டி அவரை வழி பட்டுப் பலவகைச் சிறப்புக்களைச் செய்தனர். அரசு நட்டானேரி என்ற ஏரி ஒன்றையும் கோயிலுக் கருகில் வெட்டுவித்தார். இக்காலத்தும் நிமித்தம் பார்ப்பதற்கு அக்கோயிலுக்குப் பலர் செல்லுவர்.

இவ்வாலயங்களையன்றி விசுவநாதஸ்வாமி கோயில், சஞ்சீவிராயன் கோயில், காளிங்க நர்த்த னர் கோயில் முதலிய பல கோயில்கள் உண்டு. மிக வும் தூயராகவும் செல்வராகவும் சமஸ்தானத்து அதிகாரியாகவும் இருந்து விளங்கிய மீனாட்சி தீட்சிதரென்பவரால் கட்டப்பெற்ற பெரிய மண்டப மொன்று மேற்கூறிய குறிஞ்சான் குளத்தின் தென் கரையில் உள்ளது. அதற்கு மீனாட்சி மண்டப மென்பது பெயர். அதனுள் விநாயகர் கோயிலும் சிவ விஷ்ணு ஆலயங்களும் உண்டு. என்னுடைய இளம்பிராயத்தில் அங்கே பூசைகள் செவ்வனே நடைபெற்று வந்ததைப் பார்த்திருக்கிறேன்.

ஜமீன்தார்கள்

அரியிலூர் சமஸ்தானம் பல நூற்றாண்டு களாகச் சிறப்புற்று வந்ததாகும் இந்தச் சமஸ் தானத்து ஜமீன்தார்கள் பலரைப்பற்றிய பழந் தமிழ்ப் பாடல்களும் வடமொழிச் சுலோகங்களும் தெலுங்குப் பத்தியங்களும் கீர்த்தனங்களும் உண்டு. இவர்களின் குடிப்பெயர் குன்றை ஒப்பிலாத மழவராயர் என்பது.

அரியிலூருக்குக் குன்றை என்பது ஒரு பெயர். இதனைச் சூழ்ந்துள்ள நாடு குன்றவள நாடு என் னும் பெயர் பெறும். அதுவே குன்றையென மருவி வழங்குகின்றது. மலைத்தொடர் இங்கே ஆரம்பமா கின்றதாதலின் அப்பெயர் இந் நாட்டிற்கு உண்டா யிற்றென்று தோற்றுகின்றது. இதனருகிலுள்ளன வாகிய பெரிய திருக்குன்றம், குன்றம் என்னும் ஊர்களின் பெயர்கள் இக்கருத்தை வலியுறுத்தும்.

முற்கூறிய ஒப்பிலாதவளென்னும் துர்க்கை யைக் குலதெய்வமாக உடையவர்களாதலின் 'ஒப்பிலாத ' என்னும் தொடர் ' இந்த ஜமீன்தார்களின் பெயர்களோடு சேர்த்து வழங்கப்படுகிறது.

மழவராயர்

மழவராயரென்பதற்கு மழவர்களுக்குத் தலைவ ரென்பது பொருள். மழவர்களென்பவர்கள் சிறந்த வீரர்களுக்குள் ஒரு பகுதியார். சங்க நூல்களிலும் பழைய சாசனங்களிலும் அவர்களைப் பற்றிய செய்திகளும் அவர்களது வீரத்தின் சிறப்பும் காணப்படுகின்றன. அதனால் அவர்கள் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் பழங் குடிகளென்று தெரியவருகின்றது. இப்பொழுது அவர்கள் வன்னியவகுப்பினரைச் சார்ந்தவர்களாக இங்கே இருக்கின்றார்கள்.

மழநாடு

மழவர்கள் இருந்து வாழ்ந்த காரணம் பற்றி இப் பாகத்திலுள்ள பிரதேசம் மழநாடு என்னும் பெயர் பெற்றது. அப்பெயர் மழவர் நாடு என்ப தன் திரிபே ஆகும். "பெருஞ் சரண்மா மறை யோரும்" என்று காளமேகத்தாற் சிறப்பிக்கப் பெற்ற அந்தண வகுப்பினருள் ஒரு வகையாரிற் பலர் இந்நாட்டிலிருத்தலால், அவர்கள் 'மழ நாட்டுப் பிரகசரணத்தார்' என வழங்கப் பெறுவர். பாடல் பெற்ற சிவஸ்தலமாகிய திருமழபாடி என்ப தன் பெயர் மழவர் பாடி என்பதன் சிதைவென்பர்! மழவர்கள் பாசறை அமைத்திருந்த இடமாதலின் அஃது அப்பெயர் பெற்றது. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் புராணத்தில் கூறப்படும் கொல்லி மழவனென்பவன் இம்மழநாட்டின் ஒரு பகுதியை ஆண்டவனாவன்.

இம் மழநாடு மேல்மழநாடு கீழ்மழநாடு என இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது. "மேல்மழ நாடெனும் நீர்நாடு" என்று பெரிய புராணத்திலே ஆனாயநாயனார் புராணத்தில் மேல்மழநாடு சொல்லப்படுகிறது. அரியிலூர் சமஸ்தானம் கீழ்மழநாட்டைச் சார்ந்தது.

குன்றவளநாட்டுக்கு உரியவர்களும் ஒப்பிலாத வளென்னும் தெய்வத்தை வழிபடுபவர்களும் மழவர் களுக்குத் தலைவர்களுமாயினமையின் இவ்வரியி லூர் ஜமீன்தார்கள் 'குன்றை ஒப்பிலாத மழவ ராயர்' என்னும் குடிப்பெயரைப் பெற்றார்கள்.

ஆதரவு

அவர்களிற் பலர் சிவவிஷ்ணு ஆலயங்களை வேற்றுமை யின்றிப் பாதுகாத்து வந்தனர். பல வகை மதத்தினரும் அவர்களுடைய ஆட்சியின் கீழ்க் குறைபாடின்றி வாழ்ந்திருந்தனர். ஸம்ஸ் கிருதம், தெலுங்கு, தமிழ், சங்கீதம் என்பவற்றிற் சிறந்த வித்துவான்கள் பலர் ஆதரிக்கப் பெற்றார் கள்; பல ஜமீன்தார்கள் தாங்களே தமிழ் முதலிய வற்றில் வல்லவர்களாக இருந்தார்கள். பல வித்து வான்கள் அவர்களுடைய பெருவண்மையையும் புலவர்களை அவர்கள் போற்றும் இயல்பையும் அறிந்து வந்து பாராட்டிப் பரிசுபெற்றுச் செல்வ துண்டு.

கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயர்

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அரியிலூரில் கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயரென்று ஒரு ஜமீன்தார் இருந்தார். அவர் வித்துவான்களை ஆதரித்துப் போற்றுவதில் தமிழ்நாடு முழுவதிலும் பெயர் பெற்றிருந்தார். சங்கீதத்தில் சிறந்த பயிற்சி அவருக்கு உண்டு. பல சங்கீத வித்துவான் களை வருவித்து வைத்துக்கொண்டு அவர்களுடைய ஆற்றலை அறிந்து ஏற்றவாறு பரிசு அளிப்பவர். தமக்குச் சங்கீதம் தெரியும் என்ற தருக்கினால் வித்துவான்களை இகழ்ச்சி செய்யும் தன்மை அவர்பால் மருந்துக்கும் இல்லை. அவருடைய புகழைப் பாடுவதில் புலவர்களுக்கு ஓர் ஊக்கம் இருந்தது.

அந்தகக்கவி வீரராகவ முதலியார்

இந்நாட்டிலுள்ள பல ஜமீன்தார்களிடத்தும் யாழ்ப்பாணத்தை ஆண்டுவந்த பரராச சேகர னென்ற அரசனிடத்தும் சென்று தமது கல்வி யாற்றலைக் காட்டி மட்டற்ற புகழைப் படைத்த அந்தகக்கவி வீரராகவ முதலியாரென்னும் புலவர் சிகாமணி ஒரு சமயம் அரியிலூருக்கு வந்தார். நாடெல்லாம் கவிகளாலும் புகழாலும் அடிப்படுத்திய கவிஞரை மழவராயர் உபசரித்துப் போற்றுவதற்கு என்ன தடை? அக் கவிஞருடைய கவி வெள்ளத்தில் மூழ்கிப் பேரானந்தம் அடைந்த மழவராயர் கணக் கற்ற பரிசில்களை அவருக்கு வழங்கினார்; தக்க விடுதியொன்றில் இருக்கச்செய்து வேண்டிய சௌகரியங்களை யெல்லாம் அமைத்துக் கொடுத்து அவருக்கு ராஜோபசாரம் செய்வித்தார்.

தம்பால் வந்த வித்துவான்கள் பலருக்கு அவர் குறிப்பிட்ட ஒரு வேளையில் அன்றன்று படியளந்து வருவார். தம்மைக் காணவந்தவர்களை அலைக் கழியாமல் உடனுடன் வேண்டியவற்றை விசாரித்து அவர்கள் குறையை நீக்கி அனுப்புவார். அவர் படியளக்கும் சிறப்பை அறிந்த அந்தகக்கவி வீர ராகவ முதலியார் அச்செயலைப் பாராட்டி,

    (கட்டளைக் கலித்துறை)
    *" சேயசென் குன்றை வருமொப்பி லாதிக்குச் செங்கமலத்
    தூய செங்கண்ண னிணையொப்ப னோதண் டுழாயணிந்த
    மாய னளக்கும் படிமூன்று க்ருஷ்ணைய மாமழவ
    ராய னளக்கும் படியொருநாளைக் கிலக்கமுண்டே"

என்ற பாடலைப் பாடினர்.
-------
*இதன் பொருள்:- செம்மையாகிய குன்றை நகரில் உள்ள ஒப்பிலாத மழவராயருக்குச் செந்தாமரைக் கண்ணையுடைய திருமால் ஒப்பாவானோ? திருத்துழாயை அணிந்த அந்த மாயன் அளக்கும் படி (உலகம்) மூன்றே; இந்த கிருஷ்ணைய மழவ ராயர் அளக்கும் படியோ ஒரு நாளைக்கு லக்ஷம் உண்டு. படி - உலகம், தான்யப்படி.

குமார ஒப்பிலாத மழவராயர்

கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயருக்கு ஒரு குமாரர் இருந்தார். அவர் பெயர் குமார ஒப்பிலாத மழவராயர் என்று வழங்கி வந்தது. அவரும் சங்கீ தத்தில் மிக்க பயிற்சியை உடையவராக இருந் தனர். தம் தந்தையாருடைய சபைக்கு வரும் சங்கீத வித்துவான்களுடைய இசையைக் காதாரக் கேட்டுக் கேட்டு அனுபவித்ததனாலேயே தமக்குச் சங்கீத ஞானம் உண்டாயிற்றென்பது அவர் நம்பிக்கை. ஆதலின் வித்துவான்களிடத்தில் அவருக்கிருந்த பக்தி அளவற்றதாக இருந்தது.

ஒரு நாள் மாலை நேரம்; வெண்ணிலவு பால் போலக் காய்ந்தது; தென்றல் வீசியது; இள வேனிற் காலம். மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் கலந்த அந்தக் குளிர்ந்த பொழுதில் குமார மழவராயர் "ஈசன் எந்தை இணையடி நீழலை" நினைந்து ஆனந்தமாகப் பாடிக் கொண்டு இருந்தார்.

அந்தகக்கவி வீரராகவர் குமார மழவராயரை அச்சமயத்திற் பார்க்க வந்தார்; அடையா நெடுங் கதவையுடைய அரண்மனையில் தடையின்றிப் புகுந் தார். குமார மழவராயர் மேல் மாடத்தில் பாடிக் கொண்டு மகிழ்ந்திருத்தலை யறிந்தார். "ஒருவரும் என் வரவை அறிவிக்க வேண்டாம்" என்று சொல்லி விட்டு மெல்ல மேலே சென்று மறைவி லிருந்து அவருடைய கானத்தைக் கேட்டு அனுப வித்துக் கொண்டிருந்தார்.

இசைப்பாட்டு நின்றது. கவிஞர் பெருமான் அம் மழவராயரிடம் வந்தார். வருகையிலேயே அவர் உள்ளத்தேழுந்த பேரானந்தம் பின்வரும் பாடலாக வெளிப்பட்டது.

    (கட்டளைக் கலித்துறை)
    *"வாழொப்பி லாதவன் சேயொப்பி லாத மழவதிரை
    ஆழிக் கடல்விட்டு நீபாடுங் காலத் தரிசெலுங்கால்
    நீழர் கவுத்துவ நீத்துச்செல் வானந்த நீண்மணிதான்
    காழொப் பினுநின் னிசைகேட்குங் காற்கரைந்த்தேகுமென்றே."

---------
* இதன் பொருள்:- கிருஷ்ணய ஒப்பிலாத மழவராய ருடைய குமாரனாகிய ஒப்பிலாத மழவராய, நீ பாடுங் காலத்தில் தம்முடைய பாற்கடலை விட்டுவிட்டுத் திருமால் வரும்போது தம் மார்பிலுள்ள ஒளியையுடைய கௌஸ்துபமணியானது வயிரமுடையதாக இருந்தாலும் உன்னுடைய சங்கீதத்தைக் கேட்டால் கரைந்து விடுமென்று கருதி அதனை எடுத்து வைத்துவிட்டு வருவார்.

"என்ன! நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்? முன்னமே தெரிவிக்கக் கூடாதா?" என்றார் குமார மழவராயர்.

கவிஞர்: உங்களுடைய இசை யமுதத்தைப் பருகுவதற்குச் சமயம் நேர்ந்த பொழுது அதனைக் கைவிடக் கூடாதென்று எண்ணி மறைந்திருந் தேன். குற்றமாயின் பொறுக்க வேண்டும்.

குமார: - குற்றமா! தங்களுக்கு ஆதனங் கொடுத்து இருத்தி மரியாதை செய்யாமல் இருந்த என் பிழையைத் தாங்களல்லவா பொறுக்க வேண் டும்?

கவிஞர், "இந்தச் செய்யுளைக் கேட்டருள வேண்டும்" என்று 'வாழொப்பிலாத' என்ற செய்யுளைச் சொன்னார்.

சந்கீதத்தினால் கல் உருகுமேன்பது மிகவும் அறிய செய்தி. அகத்தியரும் இராவணனுக்கும் ஒரு முறை விவாதம் நேர்ந்த பொழுது அகத்தியர் வீணை இசையால் பொதியில் மலையைக் குழையச் செய்தனர்; இராவணன் அங்ஙனம் செய்ய இயலாமையின் தோல்வியுற்ரு இலங்கைக்குப் போய் விட்டான். இச்செய்தியை, 'இராவணனைக் கந்தரு வத்தாற் பிணித்து' என்ற தொல்காப்பியப் பாயிர உரையில் வரும் தொடராலும், தஞ்சை வாணன் கோவையாலும் பிறவற்றாலும் அறியலாம். கல் இசைக்கு உருகும் என்பதை நினைந்து, 'கௌஸ் துபமணி நின்னுடைய இசைக்கு உருகிவிடும்' என்று திருமால் எண்ணினாரெனக் கற்பித்த பகுதி கவிஞருடைய அரிய நூலுணர்வைக் காட்டுகிறது.

பாட்டைக் கேட்ட மழவராயர் அளவற்ற மகிழ்ச்சி கொண்டார்; "இந்தப் பாட்டு எல்லா விதத்திலும் சிறப்புடையது. ஆயினும் என்னைப் பற்றி இருப்பது தான் ஒரு குறை" என்று தம் முடைய பணிவைப் புலப்படுத்தினார்; பரிசில் பல வழங்கினார்.

பக்கிரிக்கு யானை கொடுத்தவர்

வடநாட்டில் நவாப் ஒருவர் ஆண்டு வந்தார். துறவு பூண்ட பக்கிரி ஒருவர் அவரிடம் இருந்தார். அவருக்கு நவாப் யானையொன்று கொடுத்திருந் தனர். அதன்மேல் அவர் சில சமயம் ஏறி வருவ துண்டு. ஒரு சமயம் அந்தப் பக்கிரியை நவாப் அவமதித்து, யானையையும் கைப்பற்றிக் கொண் டார். அது பொறாத பக்கிரி,"நான் உன்னை விட்டு நீங்கி விடுகிறேன்" என்றார்.

நவாப்- இந்த இடத்தை விட்டால் உமக்கு வேறு போக்கிடம் ஏது? உம்மை யார் மதிப்பார் கள்? என்னுடைய தயையினாலல்லவோ நீர் இங்கே இருந்து வந்தீர்?

பக்கிரி:- உம்மை எண்ணித்தானா என்னை ஆண்டவர் படைத்தார்? உலக முழுவதும் எனக்கு உதவி செய்யும். நம்முடைய பாஷையே தெரியாத இடங்களிலும் நான் போய் யானைப் பரிசும் நன்மதிப்பும் பெறுவேன். அல்லாவின் அருள் இருக் கும் பொழுது எனக்கு என்ன குறை?

நவாப்:- இந்தப் பயமுறுத்தலெல்லாம் இங்கே வேண்டாம். காரியத்தில் உம்முடைய அல்லாவின் அருளைக் காட்டும்; போம்.

பக்கிரி,"பேதையே, பார்; தென்னாட்டுக்குப் போய் யானையை வாங்கி வந்து இன்னும் சில நாட் களுள் உன்னிடம் காட்டுகிறேன்" என்று சபதஞ் செய்து புறப்பட்டார். 'துறவிக்கு வேந்தன் துரும்பு' அல்லவா?

பக்கிரி பல பாஷைகளிற் பயிற்சி பெற்றவர். அவர் பல அரசர்களிடமும் பல ஜமீன்தார்களிட மும் சென்று தமக்கு யானை வேண்டுமென்று கேட் டார். "யாரும் இவருக்கு யானை கொடுக்கக் கூடாது" என்று நவாப் உத்தரவு அனுப்பியிருந் தமையால் அவர்களெல்லாம் பயந்து பக்கிரியிடம் தாம் கொடுக்க முடியாத காரணத்தைக் கூறி வருந்தி மறுத்து விட்டார்கள்.

நாடெல்லாம் சுற்றிவந்த பக்கிரி இந்த அரியி லூர் வந்து சேர்ந்தார். அப்பொழுது இங்கே இருந்த ஜமீன்தாரிடம் சென்று தமக்கு யானை ஒன்று வேண்டுமென்று கேட்டார்; நவாபினுடைய கடுமையான செயல்களையும் எடுத்துக் கூறினார். எந்த மதத்தினராயினும் ஞான முடையவர்களாக இருப்பவர்களை மதிக்க வேண்டுமென்ற கொள்கை யையுடைய ஜமீன்தார் பக்கிரிக்கு வேண்டிய உப சாரங்களைச் செய்தார்; யானையொன்றையும் வழங் கினார்; அதனைக் காப்பாற்றுவதற்கும் பிற செலவு களுக்குமாக ஒரு தக்க பொருளை உதவி ஒரு பாகனையும் உடன் அனுப்பினார். பக்கிரி, "அல்லா உங்களூக்கு வெற்றியையும் புகழையும் உண்டாக்கு வார்" என்று மனமார ஜமீன்தாரை வாழ்த்திவிட்டு யானையுடனும் பரிசில்களுடனும் நவாபுக்கு முன் போய் நின்றார்.

நவாபுக்கு ஒருபக்கம் வியப்பும் மற்றொரு பக்கம் சினமும் உண்டாயின. "நம்முடைய உத்தரவை மீறி எந்த மனுஷன் யானை கொடுத் தான்?" என்று கர்ஜனை செய்தார்; "பார்க்கிறேன் அவனுடைய ஆண்மையை" என்று மீசையை முறுக்கினார்; படையாளரை அழைத்து ஆரியி லூரின்மேற் படையெடுக்க வேண்டு மென்று கட்டலையிட்டார்.

நவாபின் படைகள் அரியிலூருக்கு வெளியே வந்து தங்கின. பக்கிரிக்கு யானை கொடுத்த குற்றத்திர்காக நவாப் யுத்தம் செய்யப் படையை அனுப்பியுள்ளாரென்பதை ஜமீன்தார் அறிந்தனர். "அல்லா வெற்றியும் புகழும் தருவார்" என்று பக்கிரி வாழ்த்தியது அவருடைய ஞாபகத்துக்கு வந்து ஊக்கத்தை உண்டாக்கியது. தாம் செய்தது ஒரு நல்ல காரியமென்றும், நல்ல காரியத்திற்கு இடையூறு வாராமற் கடவுள் காப்பாரென்றும் அவர் எண்ணி, அரியிலூரிலுள்ள தம் வழிபடு கடவுளாகிய ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயிலை அடைந்து அவரை வணங்கினார். அவருடைய உண்மை யன்பை மெச்சிய பெருமாள் ஒருவர் மீது ஆவேச ரூபமாக வந்து, "நீ படைகளோடு சென்று யுத்தம் செய்; வெற்றி உண்டாகும்" என்று கட்டளையிட்டார். ஜமீன்தார் கடவுளின் கருணைத் திறத்தை எண்ணி உருகி மகிழ்ந்து போர் புரியச் சென்றனர். போரில் நவாபின் படை தோல்வி யடைந்து ஓடிற்று. அப்பொழுதுதான் தம் படை பெரிதானாலும் அல்லாவின் அருள் எல்லாவற்றினும் பெரிதென்னும் எண்ணம் நவாபுக்கு உண்டாயிற்று. பக்கிரியின் பாதங்களில் விழுந்து தாம் செய்த குற்றத்தைப் பொறுக்கும்படி வேண்டினார்.

பக்கிரிக்கு யானை வழங்கி அதனால் நிகழ்ந்த போரிலும் வெற்றியுற்றதனால் 'பக்கிரிக்கு யானை கொடுத்தவர்' என்னும் பட்டம் ஜமீன்தாருக்கு உண்டாயிற்று. அதுமுதல் அவர் சந்ததியாருடைய பட்டங்களில் ஒன்றாக அது வழங்கி வருகிறது. பல செய்யுட்களிலும் கீர்த்தனங்களிலும் அந்தப் பட்டப் பெயரைக் காணலாம்.

பனைமரம் பிடுங்கிய வீரன்

இந்தச் சமஸ்தானத்து ஜமீன்தார்கள் பல வகையிலும் புகழ்பெற்று வருதலை அறிந்த பிற நாட்டிலுள்ள அரசர்களும் சிற்றரசர்களும் இவர் களிடம் மிக்க பொறாமை கொண்டார்கள். ஒரு முறை ஆந்திர தேசத்து ஜமீந்தாரொருவருடைய அதிகாரியான ஐயப்ப நாய்க்கரென்பவர் இந்த ஜமீன்தார்மீது படையெடுத்து வந்தனர். பெரிய படையுடன் வந்த அவர் இவ்வூருக்குத் தெற்கே ஒரு பாசறையை அமைத்து அதில் தங்கினார். உடன் வந்த வேலையாட்களைக் கொண்டு அவ்விடத்தில் ஒரு குளம் வெட்டுவித்தார். அதனையே ஐயப்ப நாய்க்கன் குளம் என்று இக்காலத்தில் வழங்குகிறார் கள். தம்முடைய ஆற்றலையும் படையின் மிகுதியை யும் காட்டுவதற்கும் தம் பெயர் என்றும் வழங்கு வதற்கும் பகையரசருடைய நாடுகளில் இங்ஙனம் செய்வது பண்டை அரசர்களுடைய வழக்கம்.

அவர் வரவையறிந்த ஜமீந்தார் தம் படை வீர்ர்களை யெல்லாம் போர்புரிய அனுப்பினார். கடும் போர் மூண்டது. இரண்டு பக்கங்களிலும் படை வீரர்கள் மிகுதியாக இருந்தனர். யுத்தம் நடக்கை யில் ஜமீந்தார் படையில் இருந்த ஒரு குதிரைவீர னுக்கு மிக்க தாகம் உண்டாயிற்று. அருகில் எங் கும் நீர்நிலை இல்லை. ஆகவே, அவன் நீரைத்தேடித் தாகம் தீர்த்துக்கொள்ள நினைந்து தன் குதிரை யைத் திருப்பி ஒரு பக்கமாக ஓட்டினான். அக் குதிரை என்ன காரணத்தாலோ அதிக மருட்சியை யடைந்து வேகமாக ஓட ஆரம்பித்தது; மழவவீர னுடைய கைக்கு அடங்காமல் வாயுவேகமாக அது பறந்தது. அந்த வேகத்தால் மிக்க தாகம் அடைந்த வீரன் குதிரையை நிறுத்த எவ்வளவோ முயன்றும் முடிய வில்லை. அவனுடைய நா உலர்ந்து விட்டது; இளைப்பு அதிகரித்தது. குதிரையோ இன்ன திசை யில்தான் செல்வதென்றில்லாமல் கண்ட இடங்களி லெல்லாம் ஓடிற்று;இந்த நிலையில், ஏதாவதொரு மரத்தினருகே வந்தால் அந்த மரத்தையாவது பிடித்துக்கொண்டு குதிரையை நிறுத்தலாமென எண்ணினான் வீரன். வழியில் ஒரு சிறிய பனை மரத்தை நோக்கிய வீரன் அதனருகில் வந்ததும் மரத்தை வேகமாகத் தழுவிக்கொண்டான். அது வேரற்றுக் காய்ந்து ஆடி நைந்து போயிருந்தது; ஆதலின் அவன் கையோடு அது வந்துவிட்டது. குதிரையின் ஓட்டம் நின்றபாடில்லை.

இளைப்பு மிகுதியால் அவன், " ஐயோ அப்பா! ஐயோ அப்பா!" என்று கூவிக்கொண்டே வந்தான்; தன் கையில் இருந்த பனைமரத்தை விடவுமில்லை.

குதிரை மீண்டும் யுத்த களத்தை நோக்கி வந் தது. ஐயப்ப நாய்க்கருடைய படையினர் அந்த மழவவீரன் வருவதை நோக்கினர். தலைதெறிக்கும் வேகத்தோடு வரும் குதிரையின்மேல் ஏறிக் கொண்டு கையில் ஒரு பனைமரத்தோடு வரும் அவ னைக்கண்டு அவர்கள் வியப்புற்றனர். அவ்வீரன் களைப்பினால் சொல்லிய சொற்கள் அவர்கள் காதில், 'ஐயப்பா, ஐயப்பா' , என்று விழுந்தன. தம்மு டைய தலைவனைத் தாக்குவதற்கு அவன் வருவதாக அவர்கள் எண்ணினர். "அப்பா மரத்தைப் பிடுங் கும் வீரனாக வல்லவா இருக்கிறான் இவன்! இவன் ஒருவனே இப்படி இருந்தால் மற்றவர்கள் எப்படி இருப்பார்களோ! இவனுக்குப் பின்னே இன்னும் எத்தனை வீரர்கள் என்ன என்ன ஆயுதங்களுடன் வருவார்களோ! மரத்தைப் பிடுங்கிப் போர் புரிவ தைப் புராணங்களிற் கேட்டிருக்கிறோம்; நேரில் பார்த்ததில்லை. இனிமேல் இவனிடம் நம்முடைய ஜபம் பலிக்காது" என்று எண்ணிச் சிலர் பயந்து ஓட ஆரம்பித்தனர். அவர்களைக் கண்டு ஐயப்ப நாய்க்கரும் எஞ்சிய படை வீரர்களும் அச்சம் கொண்டு ஓடிப் போயினர். பின்பு குதிரை காலோய்ந்து நன்றது.

அந்தக் குதிரையின் செயலை நினைக்கும் பொழுது, "உருவக் குதிரை மழவர்" என்ற அகநா னூற்றுச் செய்யுளின் அடி ஞாபகத்திற்கு வரு கின்றது.

வித்துவான்கள்

அரியலூர் சமஸ்தானத்தில் வடமொழி, தென் மொழி, தெலுங்கு என்னும் மூன்றிலும் வல்ல பல வித்துவான்களும் சங்கீத வித்துவான்களும் பரத சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்களும் ஜமீன்தார் களுடைய ஆதரவு பெற்று வாழ்ந்து வந்தார்கள். புலவர்களுடைய பெருமையை அறிந்து அவர்கள் மனத்தில் திருப்தியை உண்டாக்குதலையே பெரும் பயனாக எண்ணி ஜமீன்தார்கள் வேண்டிய உத வியை அளித்து வந்தனர். பல ஜாதியினராகிய வித்துவான்கள் தங்கள் தங்களுக்கு உதவிய ஜமீன் தார்களைப் பாராட்டி அவ்வப்போது பாடிய பாடல் களும் பிரபந்தங்களும் பலவாகும்; வேறு வகை நூல்களும் உண்டு.

தமிழ், வடமொழி, சங்கீதம் முதலியன நம்ம டைய நாட்டில் ஒழுங்காக வளர்ச்சியுற்று வந்த தற்கு முக்கிய காரணம் மடாதிபதிகளும் அரசர்க ளும் ஜமீன்தார்களும் பிரபுக்களும் வித்துவான் களை ஆதரித்துப் ப்பாதுகாத்து வந்தமையே. செல் வம் பெற்றதனால் பயன், புலவர் பாடும் புகழை யடைதலென்பதே அவர்களுடைய முக்கிய கொள் கையாக இருந்தது. கோப்பெருஞ்சோழனோடு உயிர் நீத்த பிசிராந்தையாரைப்போலவே பிற் காலத்துச் சீனக்கனென்னும் பிரபுவோடு பொய்யா மொழிப் புலவர் ஈமம் புக்கனர். அரசியல் விஷயங்களிலும் உயர்ந்த தலைமையை அளித்துக் கபிலரை வழிபட்டு வந்த பாரியைப்போல ஒட்டக்கூத்தரை வழிபட்ட குலோத்துங்கனும் இருந்தான். இங்ங னம் வழிவழி வந்த புலமையும் வண்மையும் தமிழ் நாட்டில் அறிவென்னும் விளக்கை அவியாமல் இருக்கச் செய்தன. சமஸ்தானங்கள் முதலியவை கலைகளை வளர்த்தற்குரிய இடங்களாக இருந்தன.

அரியலூர் ஜமீனில் சண்பகமன்னார் என்னும் குடிப்பெயருடைய ஒரு பரம்பரையினர் ஆஸ்தான வித்துவான்களாக இருந்து வந்தனர். அவருகள் ஸ்ரீ வைஷ்ணவர்களில் தென்கலையார். சண்பகார ணியம் எனப்படும் ராஜமன்னார் கோயிலிலிருந்து அவர்கள் வந்தவர்களாதலின் அவர்களுக்கு அந்தக் குடிப்பெயர் அமைந்தது; மன்னாரென்பது அந்த ஸ்தலத்திலுள்ள பெருமாளின் திருநாமம். இளமை யிலே செய்யுள் செய்யும் ஆற்றல் அந்தப் பரம்பரை யினருக்கு இருந்துவந்தமையின் அவர்களுக்கு பாலஸரஸ்வதி, பாலகவி என்னும் பட்டங்கள் அளிக்கப்பட்டு வழங்கி வந்தன. அவர்களிற் பலர் அத்வைதத்தில் மிகத் தேர்ச்சி பெற்றவர்கள்; சம ரச் நோக்கமுடையவர்கள். பழுவூரில் தேவி தவஞ் செய்து இறைவனை மணஞ்செய்து கொண்டதை அவர்களுள் ஒருவர் நாடகமாகப் பாடியிருக்கின்ற னர். அது 'திருக்கல்யாண நாடகம்' என்று வழங்கப்படும்; வேறொருவர் 'சிவராத்திரி நாட கம்' என்னும் ஒரு நூலை மிகவும் அழகாக இயற்றி யிருக்கிறார்; அது பிரமோத்தர காண்டத்திலுள்ள கதையை ஆதாரமாகக்கொண்டு பாடப்பெற்றது.

சண்பக மன்னார்

சண்பக மன்னாரென்னும் பொதுப்பெயரையே சிறப்புப் பெயராகப் பெற்ற ஒரு பெரியார் அக் குடும்பத்திற் பிரசித்திபெற்று விளங்கினார்; அவ ருடைய இயற்பெயர் ஸ்ரீநிவாசையங்கா ரென்பது. சண்பகமன்னாரென்று வழங்கப்படுவாரே யன்றி
அவருடைய இயற்பெயர் இன்னதென்றறிந்தவர் சிலரே.

தமிழ், வடமொழி, தெலுங்கு மூன்றுமொழி களிலும் அவர் வல்லவர்; சங்கீதத்திலும் பயிற்சி மிக்கவர்; அத்வைத சாஸ்திரத்தில் நல்ல ஆராய்ச் சியும் தெளிந்த ஞானமும் அவற்றிற்கு ஏற்ற அனு பவமும் உடையவர்; இல்லறத்தில் இருந்தனரேனும் மனத்துறவையுடையவராகித் தாமரையிலைத் தண்ணீர்போல் இருந்து தம் கடமைகள் அவர் செய்து வந்தார்.

"எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனமிருக்கும் மோனத்தே"



என்பது உண்மையன்றோ? அவரு அரியலூரில் பெருமாள் கோயிலின் புறத்தேயுள்ள தெற்கு வடக் குத் தெருவில் மேற்சிறகின் வடகோடியில் உள்ள ஒரு மடத்தில் இருந்து பாடஞ்சொல்லிக்கொண்டு சாந்த நிலையில் வாழ்ந்து வந்தார்.

அவரிடத்தில் வேதாந்த சாஸ்திர பாடங் கேட்ட வர் பலர். அவருடைய சிஷ்யர்களாகிய துறவிகள் பலர் பக்கத்தே உள்ள சிறு கிராமங்களில் மடங்கள் கட்டிக்கொண்டு அமைதியாக வாழ்ந்து வந்ததன்றி அங்கங்கே உள்ளவர்களுக்கு வேதாந்த நூலுகள் பலவற்றைப் பாடஞ்சொல்லியும் பொழுது போக்கி வந்தனர். அத்வைத சாஸ்திர உணர்வு அரியலூரி லும் அயலிடங்களிலும் சண்பகமன்னரால் பரவி யது. அவரிடம் பாடம் கேட்டவர்களுள் பலர் ஆல யத் திருப்பணிகள், தாடகப் பிரதிஷ்டைகள், அன்ன சத்திரம் முதலிய தருமங்கள் செய்தனர். அவர்களுள் ஆறுமுகப் பரதேசி என்னும் ஒருவர் ஐயம்பேட்டைக்கு அருகிலுள்ள பசுபதி கோயிலில் இருந்து வந்தனர். அவர் தம்முடைய கல்வி வன் மையாலும் சிறந்த ஒழுக்கத்தினாலும் எல்லோரா லும் நன்கு மதிக்கப்பட்டுப் பல தருமங்களைச் செய் தனர்; அக்காலத்தில் தஞ்சையிலிருந்த கலெக்டருடைய நட்பைப்பெற்றுப் பசுபதி கோயிலில் தடாகம் ஒன்றை வெட்டி ஒரு மடத்தையும் கட்டுவித்தார்.

தஞ்சை ஸமஸ்தானத்தில் இருந்த பெரிய உத் தியோகஸ்தர் ஒருவர் தம்மிடம் சண்பகமன்னாரை வருவித்து ஞானவாசிட்டமென்னும் நூலைப் பாடஞ் சொல்லும்படிக் கேட்டுக்கொண்டார். அங்ஙனமே அவர் பாடஞ் சொல்லிவருகையில் உத்தியோகஸ் தர் சில சமயங்கிளிற் பராமுகமாக இருந்து வந் தார். தொடர்ந்து சில நாழிகை பொறுமையாக இருந்து கேட்பதில்லை. இடையிடையே அந்தப் புரத்துக்குச் செல்வதும் பின்பு வந்து கேட்பதுமாக இருந்தார். "இங்ஙனம் இவருடைய மனம் இவ் வேதாந்த நூலில் பதியாமைக்குக் காரணம் எதுவா யிருக்கலாம்?" என்று சண்பகமன்னார் ஆராய்ந் தார். ஒரு தாசியிடம் அவ்வுத்தியோகஸ்தர் பழகி வருவதே அவருடைய மனவேறுபாட்டுக்குக் காரணமென்பதை அறிந்தார்; ஆனால் இனி அங்கே இருப்பது தகாதென்று உறுதி பூண்டார். ஒருநாள் இரண்டு பாக்களை இயற்றி ஒருவரிடம் கொடுத்து உத்தியோகஸ்தரிடம் அளிக்கும்படி சொல்லிவிட்டு ஊர்வந்து செர்ந்தார். அவ் விரண்டு பாட்டுக்களுள் ஒன்று வருமாறு:-

"பொருள்போம் புகழ்போம் புலைத்தன்மை சேரும்
அருள்போம் அழகுபோம் அல்லால்-தெருள்போகும்
கல்லாத நெஞ்சக் கயவர்பாற் சேர்ப்பிக்கும்
பொல்லாத மாதர் புணர்ப்பு."



தெய்வங்கள் மீதும் தம்மை ஆதரித்துவந்த ஜமீன்தார் மீதும் சண்பகமன்னார் பல செய்யுட் களையும் தனிக் கீர்த்தனங்களையும் வடமொழியி லும் தமிழிலும் பாடியிருக்கின்றார். ஜமீன்தார் நவராத்திரி விழாவைக் கொண்டாடுவதைச் சிறப் பித்து 'நவராத்திரி நாடகம்' என்ற ஒரு நூலை யும் இயற்றியுள்ளார். திருக்குடந்தை ஸ்ரீ சாரங்க பாணிப் பெருமாள் மீது ஒரு நொண்டி நாடகம் இயற்றினார். அவருடைய புலமையும் ஞானமும் இன்றளவும் அந்தப் பக்கத்தில் உள்ளவர்களாற் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவர் காலத்திற் குப்பின் அவருடைய சிஷ்யர்களால் அவருக்குக் குருபூஜை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் பெற்று வந்தது. அவருடைய பேரராகிய வித்து வான் சடகோபையங்கார் காலம் வரையில் அது நடந்து வந்தது.

ஐயாவையங்கார்

சண்பகமன்னாருக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்களுள் மூத்தவர் ஐயா வையங்காரென்பவர். அவர் தம் தந்தையாரைப் போலவே திறமையும் பெருமையும் உடையவராக இருந்தார்; அவரினும் அதிகமான உள்ளத்துறவை யுடையவர். அவர் இயற்றிய பாடல்களும் கீர்த் தனங்களும் பல உண்டு. அரண்மனை வித்துவா னாக அவர் இருந்து வருகையில் துறவுணர்ச்சி மிக்க அவரது மனம் அவ்வாழ்க்கையில் அதிருப்தி யுற்றது. இடைவிடாமல் இறைவனுக்குத் திருப் பணி செய்தலை மேற்கொண்டு மனமொழி மெய் களால் அவனை வழிபட்டு வாழ்நாள் முழுதையும் கழிக்கவேண்டு மென்னும் ஆவல் அவருக்கு அதிக மாக வளர்ந்தது. தம் குடும்பத்தைப் பரம்பரை யாக ஆதரித்துவந்த ஜமீன்தாரிடத்தில் வேதனம் பெற்றால், 'செஞ்சோற்றுக்கடன்' கழிப்பதற்காக அவரது சமயமறிந்து சென்று உவப்பித்தலும் விசேஷ காலங்களில் யாரேனும் வந்தால் சென்று பிரசங்கம் செய்து கௌரவித்தலும் ஆகிய பல கடமைகளைச் செய்து வரவேண்டுமென்று எண்ணி னார். அவற்றைச் செய்துவந்தமையால் தாம் மேற்கொண்ட அப்பியாசங்களுக்கு இடையூறு நேர்ந்தது. ஆதலின் சமஸ்தானத்தொடர்பை நீக்கி விட்டுச் சாந்தமாக இருத்தலையே அவர் மனம் நாடி நின்றது.

சரியான காலங்களில் அவர் அரண்மனைக்கு வருவதில் ஊக்கங் காட்டாமலிருந்த காரணம்பற்றி அவர் காலத்திலிருந்த ஜமீன்தார் ஒருமுறை அவ ரிடம் அவமதிப்பாக நடந்துகொண்டார். அச் செயல் தவறாக இருப்பினும் தம் கருத்து நிறை வேறுதற்கு மிக்க அனுகூலமானதென்று அவர் கருதினார். அவருடைய பற்றற்ற தன்மையும் உலக விஷயங்களில் உள்ள வெறுப்பும் இறைவன் பாலுள்ள திண்ணியதாகிய அன்பும் வெளிப்படுதற்கு அந்த ஜமீந்தாருடைய செயல் காரணமாயிற்று.

தம்மிடம் ஜமீன்தார் அவமதிப்பாக நடந்ததை உணர்ந்த ஐயாவையங்கார் நேரே பெருமாள் கோயிலுக்கு வந்தார்; தசாவதார மண்டபத்திற் குள் நுழைந்து ஸ்ரீ நரசிங்கமூர்த்தியின் முன் நின்றார். அதுகாறும் தம்முடைய வாழ்வு வீணாயிற் றென்று நைந்தார்; கண்ணீர் வார மயிர்க் கூச் செறிய உள்ளம் உருகி,

    (கட்டளைக் கலிப்பா)
    "வஞ்சமாரு மனத்தரைக் காவென்று
          வாழ்த்தி வாழ்த்தி மனதுபுண் ணாகவே
    பஞ்ச காலத்திற் பிள்ளைவிற் பார்கள்போல்
          ப்ரபந்தம் விற்றுப் பரிசு பெறாமலே
    நெஞ்சம் வாடி யிளைந்துநொந் தேனையா
          நித்த நின்மல நின்னடி தஞ்சங்காண்
    செஞ்சொல் நாவலர் போற்றவெந் நாளிலும்
          செழித்து வாழரி யில்நர சிங்கமே"

என்ற பாடலை வாய்விட்டுக் கதறிச் சொல்லி அடி யற்ற மரம்போல் விழுந்து வணங்கினார்; 'இனி நரஸ்துதியையும் நரஸேவையையும் விட்டு நரசிங் கத்தைப் பணிந்து பாடுவதே நமது கடமையாகும்' என்னும் வைராக்கியத்தை அடைந்தார்.

அன்றுமுதல் அவருடைய வாழ்க்கையில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. நரசிங்க மூர்த்திக்குச் சனிக்கிழமைதோறும் மிக்க சிறப்பாக அபிஷேக மும் பூஜை முதலியனவும் பானகம் நீர்மோருடன் பலவகைச் சித்திரான்னப் பிரசாத விநியோகங் ளும் செய்வித்துவந்தார். அவருடைய பெருமை வரவர அதிகரித்தது. அவ்வூரிலிருந்து கார்காத்த வேளாளர்கள் பலரும் பிறரும் அவருக்கு வேண்டிய வற்றை உதவி வந்தனர். பல பிரபுக்கள் அவர் மூலமாகத் தங்கள் செல்வமானது திருப்பணி முதலியவற்றிற் பயன்படுவதை ஒரு பெரும் பேறாகக் கருதி உபகரித்தனர். பல திருப்பணிகளை அவர் செய்தார். தசாவதார மண்டபத்துக்கும் கோபுரத்துக்கும் இடையேயுள்ள இடம் திறப்பாக இருந்தது. அங்கே விசாலமான ஒரு மண்டபத்தை அவர் கட்டுவித்தார்; கோபுரத்தைப் புதுப்பித்தார். அவருடைய மனத்துறவின் முதிர்ச்சியையும் பெருமையையும் பற்றி என் தந்தையார் பலமுறை பாராட்டிச்சொல்லியிருப்பதுண்டு.

சடகோபையங்கார்

ஐயாவையங்காருக்கு ஐந்து குமாரர்கள் உண்டு. அவர்கள் ஐவரும் தமிழ்க்கல்வியிலும் சங்கீதத்திலும் சிறந்த பயிற்சியுள்ளவர்கள். அவர்களுள் சடகோபையங்காரென்பவர் ஐந்தாங் குமாரர்: பல பிரபந்தங்களை ஆராய்ந்து வாசித் துப் பாடஞ் சொல்லும் ஆற்றலுடையவர்; செவ் வைச் சூடுவார் பாகவதத்திலும் ஞானவாசிட்டம் முதலியவற்றிலும் மிக்க பழக்கமுடையவர்; அத் வைத சாஸ்திரத்திற் சிறந்த அறிவுவாய்ந்தவர்; சங்கீதப்பயிற்சியும் அவருக்கு இருந்தது; வீணை வாசிப்பதில் அவருக்கு நல்ல தேர்ச்சி உண்டு.

அவர் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து விடுவார். நித்திய கர்மானுஷ்டானங்ககளை ஒழுங் காகச் செய்வார். பின்பு புத்தகங்களை எடுத்துக் கொண்டு தம் வீட்டுத் திண்ணைக் கோடியில் அமர்ந்து கொள்வார். எந்த நூலையாவது படித்து இன்புற்றுக்கொன்டே இருப்பார்.வீதி வழியே செல்பவர்கள் அவரைக் கண்டால் வணக்கத்தோடு அந்தத் திண்ணையில் வந்து அவர் சொல்வன வற்றைக் கேட்கும்பொருட்டு இருப்பார்கள். உடனே அவர் ஏதாவது தமிழ்ப் பாடல் சொல்வார்; பிரசங்கமும் செய்வார்.

சடகோபையங்காரும் என் தந்தையாரும் இளமை தொடங்கி நட்புடையவர்களாக இருந்தார் கள்.என் தந்தையார் பாடுங்காலங்களில் அவர் வீணை வாசிப்பார்.இருவரும் சங்கீத சம்பந்தமாக அடிக்கடி பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.அவர் வீட்டிற்கு எதிர் வீட்டில் நாங்கள் குடியிருந்து வந்தோம் . நாள் தவறாமல் அவர் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, வந்தவர்களுக்கு அவர் சலிப்பில்லாமல் தமிழ்ப்பாடஞ் சொல்லுவார்.அப்படி அவர் சொல்லிவரும்போது நானும் சென்று உடனிருந்து கேட்பேன்.என் தந்தையாரும் எனக்குத் தமிழ்ப் பாடஞ் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்று என்னை அவரிடம் ஒப்பித்தார்.நான் அவருடைய பேச்சில் ஈடுபட்டு மிகுந்த ஆவலுடன் அவர் சொல்லுவனவற்றைக் கேட்பேன்.அதனால் அவ ருக்கு என்பால் அன்பு உண்டாயிற்று.

எந்த விஷயத்தைச் சொன்னாலும் அதைச் சுவைபடச் சொல்வதில் அவருக்கு இயல்பாகவே ஒரு திறமை இருந்தது.ஒரு வேளைக்கு இரண்டு மூன்று செய்யுட்களே அவர் சொல்லுவார்;ஆனாலும் மனத்தில் தெளிவாகப் படும்படி பல உதாரணங் களைக் காட்டி விரிவாகப் பொருள் சொல்வார்.சிறு விஷயமானாலும் அதற்குப் பொருத்தமான செய்தி களைச் சேர்த்துக் கொண்டு அழகு படுத்திச் சொல் லும்பொழுது என்னுடைய‌ மனம் அதில் ஈடுபட்டு விடும்.ஏழாம் பிராய முதலே நான் அவரிடம் பாடங் கேட்டு வந்தேன்.அவர் சொல்லும் முறையானது எந்த விஷயத்தையும் எளிதாகவும் சுவை யுள்ளதாகவும் தோன்றச் செய்யும். தமிழில் நான் ஈடுபட்டதற்கு அவரே முதற்காரணம்.

அவரிடம் திருவேங்கடத்தந்தாதி, திருவரங்கத் தந்தாதி, திருவேங்கடமாலை முதலியவற்றைக் கேட்டிருக்கிறேன். மிகவும் இளைய பருவத்ததிற் கேட்டேனானாலும் அவரைப்பற்றிய ஞாபகமும் அவர் என் நெஞ்சிற் படும்படி சொன்ன வார்த்தை களின் திறமும் இன்னும் என் மனத்தைவிட்டு அகலவேயில்லை.

பல தனிப்பாடல்களையும் பல கீர்த்தனங்களை யும் சில பிரபந்தங்களையும் அவர் இயற்றியிருக் கின்றனர். ஸ்ரீ வைஷ்ணவராயினும் அத்வைதக் கொள்கையும் அந்த நெறியிற் பயிற்சியும் பெற்றவ ராதலின் சமரசமான தெய்வ வழிபாடுடையவராக இருந்தனர். அரியிலூர் ஸ்ரீ ஆலந்துறையீசர் விஷயமாக ஒரு பதிகமும் விசுவகுல வகுப்பினர் சிலருடைய வேண்டுகோளின்படி ஸ்ரீ காமாட்சி யம்மை விஷயமாக ஒரு பதிகமும் ஸ்ரீ சருக்கரை விநாயகரென்னும் மூர்த்தி விஷயமாக ஒரு பஞ்ச ரத்தினமும் இயற்றி யிருக்கிறார். அரியிற்சிலேடை வெண்பா, ஜீவப்பிரும்ம ஐக்கிய சரித்திரம் முதலிய நூல்கள் அவராற் செய்யப்பெற்றன. இராமாயண வண்ணமென்பது ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொன்றாக நாட்டை முதலிய ஏழு ராகங்களால் அமைந்த ஏழு பகுதிகளை யுடையது. ஜீவப்பிரும்ம ஐக்கிய சரித்திரம் நாடக ரூபத்திற் செய்யப் பெற்றது. அதிலுள்ள பல கீர்த்தனங்களை அவர் அடிக்கடி சொல்லி நயங்களை எடுத்துக் காட்டுவார். திருவாவடுதுறையில் ஆதீன வித்துவானாக இருந்த கந்தசாமிக் கவிராயரென்பவர் அந்நாடகத்துக்கு ஒரு சிறப்புப் பாயிரம் அளித்திருக்கிறார்;

"என்னை யறிய வெனக்கறிவித் தானரியில்
தன்னை நிகருஞ் சடகோபன்" என்பது அதன் முதலிரண்டடி.


அரியலூர் அருகேயுள்ள ஓர் ஊரிலிருந்த ஆலயித்தின் அதிகாரிகளான பஞ்சாயத்தார் அவ் வாலயித்தின் வருவாயை உரிய பணிகளிற் செல விடாமற் பலவாறாக அழித்து வருவதை அறிந்து அவர்களுடைய அறியாமையையும், அநியாயச் செயலையும் எடுத்துக் காட்டி 'பஞ்சாயத்து மாலை' என்னும் பெயரால் அவர் ஒரு நூல் இயற்றினார்.

பொருளை மேன்மேலே ஈட்டவேண்டுமென்னும் நோக்கம் இல்லாமல் தமிழ்நூற் கடலிலே துளைந்து விளையாடுவதொன்றையே பேரின்பமாகக் கருதும் புலவர்களுக்கு வறுமை புதிதன்று. சடகோபையங் கார் பிறரால் நன்கு மதிக்கப்பெற்ற அறிஞராயி னும் வறிஞராக இருந்தார். ஆனாலும், பெற்றது கொண்டு திருப்தியடையும் இயல்பு அவரது வாழ்க் கையை இன்பமாக்கியது. அரியலூர் ஸமஸ்தா னம் வரவர மெலிவுற்றதாதலின் அதன் ஆதரவு அவருக்கும் பிறருக்கும் இலதாயிற்று.

குளிருக்குப் போர்த்துக்கொள்ள ஒரு துப்பட்டி வேண்டி ஒரு வேளாளப் பிரபுவாகிய மல்லூர்ச் சொக்கலிங்கம் பிள்ளை யென்பவருக்கு ஒரு செய்யு ளெழுதி யனுப்பினார்; அவர் லிங்கம்பிள்ளை யென் றும் வழங்கப்பெறுவார். அவர் ஒன்றுக்கு இரண் டாக வாங்கி உதவினார். அச்செய்யுளின் ஈற்றடி,

"துப்பட்டி வாங்கித்தர வேண்டும் லிங்க துரைச்சிங்கமே" என்பது.

மாலைவேளையில் கடைவீதிவழியே சடகோபை யங்கார் செல்வதுண்டு. நானும் உடன் போவேன். அப்பொழுது ஏதாவது பாடலைச் சொல்லிப் பொருள் கூறிக்கொண்டே போவார். ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து அவரை அழைத்து மரியாதையாக இருக்கச் செய்து ஒரு தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். இவ்விதம் பெற்றுக் கொண்ட வெற்றிலைகளையும், பாக்கையும் தொகுத்துவைத் துக் கொள்வார். அவற்றை விற்று அவ்விலையைக் கொண்டு வேறு பண்டம் வாங்குவார்.

அவர் இருக்கும் இடத்தில் சிலர் எப்போதும் உடன் இருப்பார்கள். அவர் ஏதாவது பாடலைச் சொல்லிப் பொருள் கூறிக்கொண்டிருப்பார். சொல் லிச் சொல்லிப் பழக வேண்டுமென்பது அவர் கொள்கை. "கம்பத்தை வைத்துக்கொண்டாவது கூறிப் பழகினால்தான் படித்தவைகளை மறவாமல் இருப்போம். பாடங் கேட்பவனை மாத்திரம் உத் தேசித்துச் சொல்லவே கூடாது. நமக்கே அது பிரயோசனம்; கல்வியில் அபிவிருத்தி அடைய லாம்" என்று அவர் அடிக்கடி சொல்வார்.

ஒரு நாள் அவர் வீட்டுத்திண்ணையில் இருந்து மிக இரைந்து யாருக்கோ நெடுநேரம் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தார். நான் எங்கள் வீட்டில் இருந்தே கேட்டுக் கொண்டிருந்தேன். தடை யொன்றும் இல்லாமல் சொல்லிக் கொண்டே வந்தார். 'கேட்பவர் இடையில் சந்தேகம் ஒன்றும் கேட்கமாட்டாரா?' என்று நான் நினைத்தேன். சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்தேன். அவருக்கு முன் அமர்ந்திருந்தவர் கோபாலசாமி ஐயங்காரென்ற ஒரு முழுச் செவிடர். எனக்கு உண்டான ஆச்சரியத்துக்கு எல்லையே இல்லை. அவர் செவிடர் என்பது ஐயங்காருக்குத் தெரியும். "கேட்பவரை மாத்திரம் உத்தேசித்துச் சொல்லவே கூடாது; நமக்கே அது பிரயோசனம்" என்று தாம் சொன்னதை ஐயங்கார் செயலில் காட்டினா ரென்று எண்ணினேன். பாடஞ் சொல்வதில் அவருக்கு இருந்த அளவற்ற ஆவல் இதனால் விளங்குகிறதல்லவா?


ஏரிக்கு கலிங்கு கட்டிய அரியலூர் மழவராயர் ஜமீன்தார் - அரியலூர் கல்வெட்டில் புதுதகவல்



அரியலூரை ஆட்சி செய்த ஜமீன்தார் சந்தன ஏரிக்கு தண்ணீர் வரத்துக்காக கலிங்கு கட்டியது பற்றிக் கூறும் புதிய கல்வெட்டு கிடைத்தள்ளது .
அரியலூரில் இக்கல் வெட்டுசந்தன ஏரிக்கு போகும் வழியில் பஸ்டிப்போ பின்புறம் ராவுத்தன் பட்டி சாலையில் உள்ள தரைப்பாலம் வாய்க்காலில் வைத்துக் கட்டப்பட்டுள்ளது . இக்கல்வெட்டு பற்றி முனைவர்பட்டஆராய்ச்சியாளர் செவ்வேள் கொடுத்து தகவலின் பேரில் அரியலூர் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் டாக்டர் தியாராஜன் சென்று படியெடுத்து ஆய்வு செய்தார் . இவருடன் பேராசிரியர் ரவிச்சந்திரனும் ஆய்வில் கலந்து கொண்டார்.

இக்கல் வெட்டு தரும் செய்திகளை பற்றி பேராசிரியர் டாக்டர் தியாகராஜன் கூறியதாவது . ஏழு வரிகளில் மிக அழகிய கற்பலகையில் மிக அழகிய கற்பலகையில் இக்கல்வெட்டு சகவருஷம் 1759 மற்றும் கலியவருஷம் 4938ம் ஆண்டில் இது எழுதப் பட்டுள்ளது. ஏவிளம்பி வருஷம் சித்திரை மாதம் 17ம் தேதி குருவாரம் உத்திராடம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் அரியலூரை ஆட்சி செய்த விஜய ஒப்பிலாத மழவராயர் என்ற ஜமீன்தார் கலிங்கு கட்டியுள்ளார் என இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இவர் அரியலூர் மகாராஜா ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவராய துரை என்பரின் மகன் எனவும் இக்கல்வெட்டு கூறுகிறது. கலிங்கு என்பது ஏரி நீர் நிரம்பி வழிந்து செல்லும் கடைப்பகுதியில் கட்டப்படும் நீர் அமைப்பாகும் . இந்த கலிங்கு சந்தன ஏரிக்கு கட்டப்பட்டது எனக்கருதலாம். இக்கல் வெட்டில் உள்ள கற்பலகை தற்போது இந்த ஏரிக்கரையை ஒட்டியுள்ள ஒரு தரைப்பாலத்தில் வைத்து கட்டப்பட்டுள்ளது . இக்கல்வெட்டு உள்ள பகுதி ஏரியின் கடைப்பகுதியாக ஒரு காலத்தில் இருந்திருக்கலாம் . தற்போது இது தூரந்து போய் இவ்வழியாக சாலை செல்கிறது . வரலாற்று சிறப்புடைய இக்கல்வெட்டு தற்பொழுது இப்பகுதியில் போடப்பட்டு வரும் சாலை மண்ணால் மூடப்பட்டு மறைந்து போய்விடால் காப்பாற்றப்பட வேண்டியது முக்கியமானதாகம் இவ்வாறு அவர் கூறியுள்ளார் .

கலிங்கு பற்றிக்கூறும் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள வாசகம்

ஸ்வஸ்தி ஸ்ரீசாலிசாகன சகாப்தஹாளூ 1759
கலியாப்தஹா ளூ4938யிதில் நிகழ்கி
ன்ற யோவிளப் ளூசித்திரை மீ 17 உகுருவா
ரம் உத்டதிராடங்கூடிய சுபதினத்தில் அரியலூர் மஹா
றாசறாச ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவறாயதுரை அவ
ர்கள் குமாரர் விசைய ஒப்பிலாத மழவறாயதுரை அவ
ர்களால் யிந்த கலுங்கு தர்மஞ் செய்யலாச்சது . 

(ஸ்வஸ்தி ஸ்ரீசாலிசாகன சகாப்தஹாளூ 1759 கலியாப்தஹா ளூ4938யிதில் நிகழ்கின்ற யோவிளப் ளூசித்திரை மீ 17 உகுருவாரம் உத்டதிராடங்கூடிய சுபதினத்தில் அரியலூர் மஹாறாசறாச ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவறாயதுரை அவர்கள் குமாரர் விசைய ஒப்பிலாத மழவறாயதுரை அவர்களால் யிந்த கலுங்கு தர்மஞ் செய்யலாச்சது .)

Friday, March 22, 2013

கேரள அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள வன்னியர்களை பற்றிய ஓலைசுவடியில் "அரியலூர்ப் பள்ளி வில்லிப் படையாண்டவர் கதை " பற்றிய செய்தி :


இதில் வழக்கம் போல வன்னியர் புராணத்தை பற்றிய செய்திகளை சொல்லிவிட்டு பிறகு சில சுவையான செய்திகளை அந்த ஆவணம் கூறுகிறது.

அதாவது வன்னியர்கள் சிலர் சந்திரகிரியில் இருந்து காஞ்சிபுரம் சென்றதையும் , அங்கு காஞ்சிபுர மன்னர் தங்களிடம் பெண் கேட்டதால் அவரை சிரத்சேதம் செய்துவிட்டு வேலூருக்கு சென்று தங்கிய போது ,

அப்பொழுது அங்கு ஆட்சி செய்த மன்னர் இவர்களுக்கு

“சந்திரபதி பள்ளி வில்லி படையாண்டவர்கள் ”
என்றும்
“அரியகுல மழுவெறி ராயர் ”

எனவும் விருதுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது . சில காலம் அங்கு வாழ்ந்தனர் .

பிறகு பாண்டிய நாடு சென்று , பாண்டிய நாட்டில் விக்கிரம பாண்டியனுக்கு சேவை செய்து வாழும் நாளில் , அப்பகுதியில் தொல்லை தந்து வந்த ஒரு புலியைக் கொன்று , மற்றொரு புலியை வளைத்து பிடித்து வீரச் செயல் புரிந்த செய்தி அந்த சுவடியில் உள்ளது . அங்கு பண்ணை அமைத்து , புதிய நகரம் ஏற்ப்படுத்தி அதில் விநாயகர் கோவில் உண்டாக்கி மற்றவர் துதிக்கும் நிலையில் வாழ்ந்து மேற்கூறப்பெற்ற தென்காசி பாண்டியனுக்கு உதவி வந்திருக்கின்றனர் .

புலியைக் கொன்றதால் பெற்ற விருது :
=======================================
பாண்டிய நாட்டில் தொல்லை தந்த புலிகளை கொன்றதால் இவர்களுக்கு

மகாபெரும் சேனை பள்ளி வில்லி படையாண்ட பராக்கிரமர் ”

என்ற விருதை பாண்டிய மன்னன் வழங்கி சிறப்பித்துள்ளார் . மேலும்

மீன்கொடி , கானக் கவரி , கனகத் தண்டிகை , வெற்றி சங்கம் (சங்கு ) ஆகிய வரிசைகள கொடுத்ததோடு  தேவநல்லூர் மற்றும் கயத்தாறு ஆகிய சீமைகளை காவல் காத்து வரும்படியும் உரைத்திருக்கிறார் .

காசி விசுவநாதர் கோவிலில் மடம் கட்டுதல் :
=============================================

அப்போது செகமெல்லாம் புகழும் , உண்மை உபதேசம் செய்த சற்குருவாம் தேசிகருக்கு (காஞ்சி சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் ) தென்காசி காசி விசுவலிங்கேசர் ஆலயத்ததில் மடாலயம் ஒன்று ஏற்ப்படுத்தி தந்துள்ளனர்.

இந்த சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் வன்னியர்களின் குருவாக காஞ்சியில் வாழ்ந்து , பின்பு பாண்டிய நாட்டில் தென்காசியில் வாழ்ந்த செய்தி வரகுண பாண்டிய வன்னியர் வெளியிட்ட தென்காசி செப்பேட்டின் வாயிலாகத் தெரிகிறது . ஒலைசுவடியின் மூலம் முதன்முதலாக இச்சுவடியில் தான் காண முடிகிறது .

குலசேகர பாண்டியனின் பகைவரை வெல்லுதல் :
==============================================

பிறகு வள்ளியூரில் ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் பகைவரான மன்னன் , மதிப்பன் என்ற இருவரை வதைத்து அவர்களின் தலைகளை கொய்து , மன்னன் முன்பாக கொண்டு சென்று வைத்திருக்கின்றனர் .

மன்னன் மகிழ்ந்து பலவித வரிசைகளை இவர்களுக்கு அளித்திருக்கிறார் .

ஆழ்வார்குறிச்சியில் ஆட்சி புரிதல் :
===============================
இறுதியாக தென்காசிக்கு தெற்க்கே உள்ள ஆழ்வார் குறிச்சி என்னும் திருத்தலத்துக்கு வந்து தங்கி ஆட்சி புரிந்துள்ளனர் . இச்செய்தியை ஓலையில்

“ஆள்வார் குறிச்சியதி பண்ணையம் பதியாள் வீரர்களான வன்னிய குலத்தோர் பொன்போலுலகில் பொலிந்து வாழ்ந்துயர்ந்தோராகிய சந்திரபதி அரியலூர் பள்ளி வில்லி படையாண்டவர்கள் ”

என்று குறிப்பிட்டுள்ளது .

வன்னியர்களின் அறக்கொடைகளையும் புலவர்களை போற்றியமையும் புகழ்ந்து கூறும் “திருக்கை வளம் ” என்னும் நூல் பன்னீராயிரம் பண்ணையை ஆட்சி செய்து வந்த வன்னிய பாளையக்காரர் பற்றி கூறும்போது

“-------------- மெச்சு பண்ணை
பன்னிரண்டாயிரத்தோன் மேற்பகருங் கட்டியகொத்துக்
கின்ன லிலாமற் சொர்ன மிசையுங் கை

என்பது அதிலுள்ள பாடல் வரிகள் .

அதாவது பன்னீராயிரம் பண்ணையை ஆண்டு வந்த அரசன் மீது 'கட்டிய கொத்து ' என்னும் நூலை பாடிய புலவருக்கு மன்னர் தங்கங்களை பரிசளித்தான் என்பது பொருள் .

திருக்கை வள உரையாசிரியர் பிரசங்க பூஷணம் குக ஸ்ரீ.பு.பா.ரத்தினசபாபதி நாயகர் அவர்கள்

"பாண்டிய நாட்டில் பன்னீராயிரம் பண்ணையை ஆண்டு கொண்டிருந்த அக்னி வம்ச சத்திரிய வன்னிய மகாராஜாவாகிய, கட்டிய நயினார் வம்சத்திலவதரித்து , காரைக்கால் அக்னி வம்ச சத்திரிய மகா சபையில் அக்ராசனாதிபதியாயிருந்த ஆ.வை.தசவீர பூபதி நாயகர்வர்களால் கடந்த பவள ஆண்டு (கி .பி . 1873 ) பங்குனி மாதம் அச்சிட்டு முதன்முதலில் திருக்கை வளம் வெளிவந்தது "

என்று எழுதிருக்கிறார் .

தென்காசி வன்னியர் செப்பு பட்டயமும் இவோலைச் சுவடியும் :
=====================================================================

தமிழ்நாட்டரசு தொல்லியல் ஆய்வாளர் திரு.நடன காசிநாதன் அவர்கள் எழுதிய வன்னியர் என்னும் நூலில் செப்பு பட்டயம் எண் 21 ஆக தென்காசி திரு.முனிசாமி நாயுடுவிடமிருந்து தமிழ்நாடு அரசு தொல் பொருள் ஆயுவுத்துறை வாங்கி , குற்றாலம் அகழ்வைப்பகத்தில் வைத்து பாதுக்காக்கபெரும் செப்பேட்டில் கூறியிருக்கிறவாறே, இந்த ஒலைசுவடியிலும் வன்னியரின் பிறப்பும், அசுரர்களை வதைத்து இலங்கை சென்று அரசனை வென்று ஐந்து கன்னிகளை , ஐந்து வன்னிய குமாரர்கள் மணந்ததும் , பின்பு அவர்கள் எந்தெந்த பகுதியில் ஆட்சி செலுத்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது .

ஆதலால் இவ்வோலைச்சுவடி 18-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் .

ஆனால் இவ்வோலைச்சுவடியில் , செப்பு பட்டயத்தில் கூறப்படாத சில அரிய செய்துகளும் உள்ளன .

மேலே கூறப்பட்டுள்ள வரகுணராம பாண்டிய வன்னியனார் செப்புப்பட்டயத்தில் (வன்னியர் , செப்புபட்டயம் எண் - 9) மன்னர் விருதுகளில் ஒன்றாக “சந்திரபதி அரசுபதி வில்லி வன்னியகுலாதிபதி ” என்பதும் இவ்வோலைச் சுவடியில் காணப்பெறும் விருதும் ஒன்று போல உள்ளன .

ஆகவே , இவ்வோலைச் சுவடியின் கூற்றால் , பன்னீராயிர பண்ணையை ஆண்டு வந்த கட்டிய நயினார் வம்சத்தினர் , அரியலூர் மழவராய நயினார் வழி வந்தவர்கள் என்று உணரமுடிகிறது .

ஆதாரம் :
========

நூல் :பெரம்பலூர் மாவட்ட தடயங்கள்
பக்கம் :43